தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme)




                                 சட் சட் சட் ... கண்ணாடிச் சாளரங்களில் பட்டுத் தெறித்தன மதிய நேர மழைத்துளிகள். இந்த பன்னாட்டு நிறுவனத்திலும் சொர்க்கமொன்று உண்டு, 12ம் தளத்திலிருந்து வேலை செய்பவருக்கு. மின் தூக்கிக்குக் காத்திருந்த வேளையில் மழைத் துளிகளுக்குள் தொலைந்த நான் ஓர் உரையாடல் கேட்டுத் திரும்பினேன்.
                                 அவருக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டம் பற்றி வெகு ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார். தனது ஓய்வூதிய வாழ்க்கையை அத்திட்டம் கவனித்துக் கொள்ளுமென்ற நம்பிக்கை தெரித்தது அவர் பேச்சில்.
"இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் நம்மை கவனித்துக் கொள்வார்களா என்ன? அதனால் இந்தத் திட்டத்தில் இணையப் போகிறேன்" என அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. வேகமாக உணவருந்தி, நிகழ்கால பிரம்மன் கூகுளிடம் ஓடினேன், தேசிய ஓய்வூதியத் திட்டம் பற்றித் தெரிந்துகொள்ள.
                                 தேசிய ஓய்வூதிய திட்டம் பற்றியும், எவ்வாறு இது ஒரு முதலீடோ அல்லது வருமான வரிச் சலுகை பெறும் கருவியோ ஆகிறது?(அப்படித் தானே விற்கிறார்கள் !!!) என்பது பற்றியும் படிக்க படிக்க ஒன்று தெளிவாகப் புரிந்தது.
                                 இத்திட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே சாலச் சிறந்தது என :)
ஆனாலும் இங்கே பதிவிடுகிறேன், திட்டத்தின் நேர்மறைகள்(ஒருவேளை இருந்தால்...) மற்றும் எதிர்மறைகளை !!!

தேசிய ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?

1.        அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அனைத்து இந்தியக் குடிமக்களும் முதுமைக் காலத்தில் பயன்பெறும் நோக்குடன் இந்திய அரசால் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை நிர்வகிப்பது ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA – Pension Fund Regulatory and Development Authority).

2.         ஆரம்பத்தில், அரசு ஊழியர்களின் பத்து மாத ஓய்வூதியத்தை அரசே வழங்கியது. 2004 முதல் இப்பொறுப்புத் துறக்க, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஊழியர்கள் மாதாமாதம் தன்பங்களிப்புத் தொகையாக சிறிது பணம் செலுத்த வேண்டும், அவர்களின் ஓய்வூதிய வாழ்க்கையைப் பாதுகாக்க.

3.        2009 முதல் இத்திட்டம் தனியார் ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தப் பட்டது.

4.        18 முதல் 60 வயது வரை உள்ள யாராலும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய இயலும்.

5.        குறைந்தபட்ச பங்களிப்புத் தொகை, வருடத்திற்கு ரூபாய் 6000.

6.        இரண்டு விதமான கணக்கு அடுக்குகள் உள்ளன.

7.        சேவை வரி உள்ளது. அரசு ஊழியர்களுக்கு 0.0102%, தனியாருக்கு 0.25%.

8.        வருடாந்திர பராமரிப்புத் தொகை ரூபாய் 190.

 

 

நன்மைகள்:

1.        80CCD (1B) வகையின் கீழ் ரூ. 50,000 வரை வரிச்சலுகை பெறலாம். பத்து லட்சங்களுக்கு மேல் ஊதியம் பெறுபவர் 15,000 வரை சேமிக்கலாம்.

2.        அரசு திட்டமாதலால் பாதுகாப்பு உறுதி(மற்றொரு வழக்கறிஞர் நிதியமைச்சர் ஆகும் வரை)

தீமைகள்:

1.        பணத்திற்கு வாழ்நாள் சிறை - பெரும்பான்மைப் பணம் சந்தாதாரர் கணக்கு முடியும் வரை அல்லது ஓய்வு பெறும் வரை எடுக்க இயலாது.

2.        ஓய்வூதிய காலத்திற்கு முன் வேண்டுமானால், 20 சதவிகித பணத்தை பரோலில் எடுக்கலாம்.

3.        விற்பனையாளர்கள் கூற்று - 2 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம். 1.5 லட்சம் வரை 80c-ல் காண்பிக்கலாம். மீதம் 50,000 80cc-ல் காண்பிக்கலாம். விபரமறிந்தவர்களுக்குத் தெரியும் - 60 சதவிகித 80C PF(Provident Fund/LIC) மூலம் வருமென்று. ஆக இதில் 1.5 லட்சம் முதலீடு செய்தால் 80C வகையில் 60000 காட்டலாம். இதற்காகவே தனியாக 50000 வரை வரிச்சலுகை பெற தனி வகையறா ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது அரசு.(எப்படியாவது பணத்தை செலுத்த வைக்க வேண்டுமாம் !!!)

4.        தேசிய ஓய்வூதியத் திட்டம் EET - ன் கீழ் வருகிறது. இடையில் எடுக்கப்படும் பணத்திற்கு வரி செலுத்த வேண்டும்.ஆகவே, இத்திட்டத்தில் முதலீடு செய்வதென்பது வரி செலுத்துதலை ஓய்வூதிய காலம் வரைத் தள்ளிப் போடுதல் போலாகிறது.

5.        40% பணம் வரி இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். 20% அப்போதைய வரி விதிப்புக் கொள்கைகளின்படி. மீதமுள்ள 40% கண்டிப்பாக ஆண்டுத் தொகையாக செலுத்த வேண்டும்.

6.        பணவீக்கத்தை சமாளிக்கும் வழியும் இத்திட்டம் தருவதில்லை. இந்த முதலீட்டின் இலாபம் வெறும் 3 - 7 சதவிகிதம் மட்டுமே!

7.        இத்திட்டத்தில் முதலீடு செய்வதில் வரும் இலாபமும் பெரிதல்ல. ஏனென்றால், இதுவும் பங்குச் சந்தையோடு சம்பந்தப்பட்டது. மற்ற காப்பீடுத் திட்டங்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை, இதில் வருமானம் மிக மிகக் குறைவு என்பதைத் தவிர.

ஆக, தேசிய ஓய்வூதியத் திட்டம் எவ்வகையிலும் ஒரு நல்ல முதலீடாகவோ, சேமிப்புக் கருவியாகவோ இருக்க இயலாது. புரியும்படிச் சொல்வதானால், இத்திட்டம் அரசியல்வாதிகளைப் போல - பேச்சு மட்டுமே உண்டு, செயல்பாடுகள் ஏதும் இல்லை. எனவே இத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் பல தடவை யோசிக்கவும்.

இளமையானவரா நீங்கள்? முதலீடு செய்ய உங்களிடம் மிகப் பெரிய சொத்து ஒன்று உள்ளது - நேரம் !!! பணத்திற்கு ஆயுட்கால தண்டனை அளித்துச் சிறையில் தள்ளாதீர்கள். பணம் உங்களுக்காக உழைக்கட்டும்.

அதற்கான ஆலோசனைகள் வேண்டுமா? எங்களை அணுகவும்.  - 861 017 2018/824 836 9621.




Comments

Popular posts from this blog

முயலும் ஆமையும் !!!

மாதம் 50 ஆயிரம் சம்பாதியுங்கள் - வாழ்க்கை முழுதும் !!!

ஆரோக்கியம் - உடலுக்கு மட்டும் தானா?